உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக புனர்நிர்மானம் செய்யப்படாமல் உள்ள குளங்களை புனர்நிர்மாணம் செய்ய வேலைத்திட்டம் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மொரவெவ அத்தாபெந்திவெவ கிராமத்தில் புனர்நிர்மாணம் செய்யப்படும் குளத்தின் வேலைகளை நேற்று (22) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
இக் குளம் நீண்டகாலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் இருப்பதனால் கூடிய பரப்பில் செய்யக்கூடிய விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் புனர்நிர்மாணம் செய்யப்படல் மூலம் எவ்வித குறைவும் இன்றி விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்று இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.
புனர்நிர்மாண வேலைகளை தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்றி தருமாறு இதன்போது மக்கள் அமைச்சரை வேண்டிக்கொண்டனர். வெவ்கம் புபுதுவ திட்டத்தின் கீழ் இதன் புனர்நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றது.
நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் தாம் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் நிலங்களில் தொடர்ச்சியாக பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான அனுமதியை வழங்குமாறும் சில சந்தர்ப்பங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் இதற்கு தடை ஏற்படுத்துவதாகவும் இதன்போது அமைச்சரிடம் மக்கள் முறையிட்டனர்.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் குழு ஒன்றை நியமித்து குறித்த மக்களது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண உள்ளதாக இதன்போது ரவ அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் ஆகிய கபில நுவன் அத்துகோரல, பிரதேச அரசியல் தலைவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையிலான அரச அதிகாரிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.