ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல நேற்று (23) இளைஞர் மற்றும் விளையாட்டு ,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .
கோமரன்கடவெல, குச்சவெளி நாவற்சோலை, திருகோணமலை பட்டணமும் சூழலும் வெள்ளைமணல் ,கந்தளாய் லீலாரத்ன மைதானம், சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் இவ்வாறு அமைச்சர் அவர்களினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இதற்காக ஒரு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரச அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.