வெளியான 2020 கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கஹவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயாத்தைச் சேர்ந்த மாணவி எம்.எப்.எப். அம்னா அனைத்துப் பாடங்களிலும் “ஏ” தர சித்திகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பாடசாலையின் கல்வி வரலாற்றில் முதல் “9ஏ” சித்திகளை பதிவு செய்துள்ள மாணவி அம்னா, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை உட்பட பல வலய மற்றும் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இலக்கிய போட்டிகளிலும் கலந்து கொண்டு பல வெற்றிகளையும் தனது பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
கஹவத்தையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.பைசல் மற்றும் எப்.பஸ்னா தம்பதிகளின் மூத்த புதல்வியான பாத்திமா அம்னாவின் வெற்றி குறித்து அதிபர் எம்.எம்.எம்.பாஹிம், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், நிவித்திகலை வலய கல்வி உயர் அதிகாரிகள் மற்றும் கஹவத்தை ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர் உட்பட கஹவத்தை பிரதேச சமயத் தலைவர்கள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் கடந்த பல வருடங்களாக விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் பல முக்கிய பாடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் எவரும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.