crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (27) இடம்பெற்றதுடன் அதில் எட்டப்பட்ட முடிவுகள்

01. இராஜதந்திர, விசேட மற்றும் கடமைக்கான கடவுச்சீட்டு உரித்துடைய நபர்களுக்கு வீசா அனுமதி பெற்றுக்கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை ஜனநாயக குடியரசு மற்றும் பஹரேன் இராஜதானிக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம்

இராஜதந்திர, விசேட மற்றும் கடமைக்கான கடவுச்சீட்டு உரித்துடைய நபர்களுக்கு வீசா அனுமதி பெற்றுக்கொள்வதிலிருந்து விடுவிப்பதற்கான இலங்கை ஜனநாயக குடியரசு மற்றும் பஹரேன் இராஜதானிக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனாலும் குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் இயலுமை கிட்டவில்லை. ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. சந்தஹிருசாய தூபியின் பராமரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அறங்காவலர் சபையை நிறுவுதல்

முப்பது வருடகாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூறும் வகையிலும், அவர்களுக்கு புண்ணியம் கிட்டும் வகையிலும்; 282 அடி மற்றும் 6 அங்குல உயரமுடைய சந்தஹிருசாய தூபி பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்பின் கீழ் அநுராதபுரம் புனித பூமியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இத்தூபியின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர் குறித்த பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அறங்காவலர் சபையொன்றை நியமிப்பதற்கும், இத்தூபிக்கு உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் வழங்கும் கொடைகளை திரட்டுதல் மற்றும் பேணிச் செல்வதற்கான நிதியமொன்றை தாபிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (அம்ரிதா மருத்துவமனை) மூலம் இதய நோயுடன் கூடிய பிள்ளைகளுக்காக இதய சத்திர சிகிக்சையை மேற்கொள்ளல்

ஒவ்வொரு வருடமும் எமது நாட்டில் 3000 குழந்தைகள் இதயநோயுடன் பிறக்கின்றனர். அவர்களில் 1500 – 2000 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும் உள்ளது. கூடுதலான மருத்துவமனைகளிலிருந்து இவ்வாறான பிள்ளைகளை கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அனுப்புவதுடன், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 900 சத்திரசிகிச்சைகளை மாத்திரமே மேற்கொள்வதற்கான வசதிகள் குறித்த மருத்துவமனையில் காணப்படுகின்றன. அதனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ‘டுவைவடந ர்நயசவ’ செயற்திட்டத்தின் கீழ் சத்திரசிகிச்சை கூடம் மற்றும் அவசர சிகிச்சைக்காக போதுமானளவு வசதிகளை வழங்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரைக்கும், இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நெரிசலைக் குறைப்பதற்காக இந்தியாவின் 3201 மாவட்ட சர்வதேச றொட்டரி கழகம் மற்றும் சுஐனு 3220 கொழும்பு மேற்கு றொட்டரி கழகத்தால் இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில் பிள்ளைகளுக்கான சிக்கலான இதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இரண்டு வருடங்களுக்கான கருத்திட்டமொன்று றொட்டரி கழகத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சும் இந்தியாவின் 3201 மாவட்ட சர்வதேச றொட்டரி கழகம் மற்றும் சுஐனு 3220 கொழும்பு மேற்கு றொட்டரி கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளவை அதிகரிப்பதற்காக சிறிய நடுத்தர அளவிலான குளங்களில் திரண்டுள்ள மணல், மண் மற்றும் சேதன பொருட்களை அகற்றுதல்

கிராமிய விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக 5,000 கிராமிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களை துரிதமாக மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பல காலமாக மண் அரித்துக் கொண்டு வரல், நீரியல் தாவரங்கள் மற்றும் பாசிகள் வளர்வதாலும், அவை உக்கலடைவதாலும் நிரம்பிப் போயுள்ள குளப்படுக்கையை அகழ்ந்து குறித்த குளங்களின் கொள்ளவை அதிகரித்தல் போன்றன இக்குளங்களின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளின் முக்கிய வேண்டுகோள்களாக அமைந்துள்ளது. அதற்காக குறித்த குளங்களில் படிந்துள்ள குளப்பொருக்கு மண்ணை அகற்றி ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளதுடன், அவ்வாறு அகற்றப்படும் குளப்பொருக்குகள் உள்ளிட்ட பொருட்களை மட்பாண்ட கைத்தொழில், மணல் அரித்தெடுத்தல், சேதன உரத்தயாரிப்பு மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளுக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்துவதற்கான இயலுமைகள் காணப்படுகின்றன. அதனால், அவ்வாறான மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய வகையில் குறித்த பொருட்களை அகற்றிக் கொள்வதற்கும் இடமளிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு செலவின்றி, வருமானத்தையும் பெற்றுக்கொண்டு குறித்த குளங்களின் நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளவுகளை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இப்பணிக்காக கமநல சேவைகள் திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் குழாம் போதுமானதாக இன்மையால், அதற்காக தேசிய இயந்திரவியல் நிறுவனம், அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணிப்புக்கள் கூட்டுத்தாபனம், மத்திய பொறியிலாளர் சேவைகள் (தனியார்) நிறுவனம் மற்றும் மகநெகும போன்ற நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கமநல சேவைகள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் குளங்களில் படிந்துள்ள பொருட்களை அரசாங்கத்திற்கு நன்மையளிக்கும் வகையிலும் தகுந்த தரநியமங்களுடன் அகற்றுவதற்காக தனியார் துறையினரின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்காகவும், நீர்ப்பாசன அமைச்சின் கீழ் எதிர்வரும் 03 வருடங்களில் 2,000 குளங்களின் குளப்படுக்கையை துப்பரவாக்கல் மற்றும் கொள்ளவை அதிகரித்தல் போன்றவற்றுக்கு நடவடிக்கை எடுப்பதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை ஒதுக்கி வழங்கல்

பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டமானது பிரதேச மட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டமாகும். அதற்காக முதலீட்டாளர்களைத் தெரிவு செய்தல், 1990 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ‘பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழு’ மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள ‘அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு’ போன்றவற்றால் கருத்திட்ட யோசனைகள் முழுமையான மதிப்பீட்டின் பின்னர் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, மேற்படி குழுவால் 24 கருத்திட்ட யோசனைகளை ஆராய்ந்து குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 10 கைத்தொழில் பேட்டைகளில் காணித்துண்டுகளை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகளுக்கமைய ஏற்புடைய முதலீட்டாளர்களுக்கு 35 வருட நீண்டகால குத்தகையின் அடிப்படையில் காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. அம்பாந்தோட்டை மாவட்டத்தின், வீரகெட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வெஹெரகொட எனும் பெயரிலான காணியை ஸ்ரீ ஜினரத்ன கற்கைகள் நிறுவனத்திற்கு விவசாயத் தொழிற் பயிற்சி நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கல்

அம்பாந்தோட்டை மாவட்டத்தின், வீரகெட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வெஹெரகொட தோட்டம் எனும் பெயரிலான 131 ஏக்கர் 2 ரூட் 29 பேர்ச்சர்ஸ் காணியானது, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சரியான பராமரிப்பின்றி செழிப்பற்ற தெங்கு செய்கையுடன் கூடிய இக்காணியை விவசாய தொழிற் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீ ஜினரத்ன கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை வேண்டுகோள் சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, குறித்த காணி 30 வருட நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேர அட்டவணைக்கமைவான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விமானப் போக்குவரத்துக் கம்பனிகளை கவர்ந்திழுத்தல்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சர்வதேச விமானப் போக்குவரத்துக் கம்பனிகளை குறித்த விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினத்திலிருந்து விமான நிலைய குடியகழ்வு வரியை இரண்டு (02) வருடங்களுக்கு முழுமையாக விடுவிப்பதற்கும், தொடர்ந்துவரும் 04 வருடங்களுக்கான விமானங்கள் தரையிறக்கம் மற்றும் தரிப்புக் கட்டணங்களுக்கான விலைக்கழிவுகளை வழங்குவதற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2021 யூலை மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சேதன உரம் மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் கிலேட்டட் தாவர நுண்ணூட்டப் பதார்த்தங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம்

2021 மே மாதம் 31 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2021ஃ2022 பெரும் போகத்திற்கான சேதன உரம் மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, நெற்செய்கைக்குத் தேவையான சேதன உரம் அரச உரக்கம்பனியால் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய பயிர்களுக்கு அனுமதிப்பத்திரம் கொண்ட உரக்கம்பனிகளால் தேவையான சேதன உரங்களை இறக்குமதி செய்து போட்டி விலைமனுக் கோரலின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான சேதன உரத்தை தாமதமின்றி போட்டி விலையின் கீழ் விநியோகிப்பதற்கு இயலுமான வகையில் இரண்டு அரச உரக்கம்பனிகள் மூலம் ஏனைய பயிர்களுக்குத் தேவையான சேதன உரத்தை இறக்கமதி செய்வதற்காகவும் விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டத்தின் கீழ் ஆபத்தான தொழில் தொடர்பான கட்டளைகளை திருத்தம் செய்தல்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் தொடக்கம் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்தலுக்கான குறைந்தபட்ச வயது 16 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குறைந்தபட்ச வயது சமவாயத்தை இலங்கையில் ஏற்று ஒப்புதலளித்த பின்னர் 2006 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க திருத்தப்பட்ட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய, தொழில் உறவுகள் விடயத்திற்கும் பொறுப்பான அமைச்சர் அவர்களால் அபாயகரமான தொழில் கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 16-18 வரையான இளைஞர்களுக்கு 51 ஆபத்தான தொழில்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில்களில் ஈடுபடுத்தல் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் அடையாளங் காணப்பட்டுள்ள குறித்த கட்டளைகளை மேலும் திருத்தியமைத்து வீட்டுப்பணி, ஒப்பனை அலங்காரத் தொழில்கள் மற்றும் கணினி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களுடனான தொழில் உள்ளிட்ட தொழில்களை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் புதிய 20 தொழில்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆபத்தான தொழில்கள் பட்டியலை 71 வரைக்கும் விரிவாக்கம் செய்து சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் திருத்தப்பட்ட கட்டளைகள் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1990 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க மாகாண ரீதியான மேல்  நீதிமன்றங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்

ஆரம்பநிலை நீதிமன்றங்கள் தொடர்பாக விசேட நடபடிமுறைகள் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக புதிய சட்டமொன்றை வகுப்பதற்கும், ஆரம்பநிலை நீதிமன்றத்தை நிறுவுவதற்கும் இயலுமான வகையில் 1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற ஒழுங்கமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கும், 2021 யூன் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த புதிய சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் 1990 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க மாகாண ரீதியான மேல்நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல்நிலை நீதிமன்றங்களின் பட்டியலில் ஆரம்பநிலை நீதிமன்றங்களையும் உள்வாங்கிக் கொள்வதற்காக குறித்த சட்டத்தின் 5(அ) உறுப்புரையை திருத்தம் செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கும் அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. குடியியல் வழக்குக் கோவை (101 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்தல்

ஆரம்பநிலை நீதிமன்றங்கள் தொடர்பான விசேட நடபடிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டதற்கு சமாந்தரமாக, அதற்கான ஏற்பாடுகளைத் தயாரிக்கும் குடியியல் வழக்குக் கோவையில் டுஓஏஐ ஆம் அத்தியாயத்தை முடிவுறுத்துவதற்காக இடைநிகழ்வு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குடியியல் வழக்குக் கோவையை திருத்தம் செய்வதற்கும் அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. குடியியல் வழக்குக் கோவை (101 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்தல்

வழக்கு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல் மற்றும் வழக்குத் தீர்ப்பு வழங்குவதற்கு எடுக்கும் காலம் குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க குடியியல் வழக்குக் கோவை (திருத்தப்பட்ட) சட்டத்தில் ‘முற்கூட்டிய வழக்கு விசாரணைச் செயன்முறை’ தொடர்பாக புதிய ஏற்பாடுகள் குடியியல் வழக்குக் கோவையில் 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த திருத்தங்கள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவு பெறவில்லை. அதனால், குறித்த பணியை சரியான வகையில் றிறைவேற்றுவதற்கு இயலுமான வகையில் ‘முற்கூட்டிய வழக்கு விசாரணைச் செயன்முறை’ இற்கான மேலதிக திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, முற்கூட்டிய வழக்கு விசாரணை மற்றும் ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபிப்பதற்காக நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கமைய குடியியல் வழக்குக் கோவையை திருத்தம் செய்வதற்காகவும், அதற்காக சட்ட வரைஞரால் சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்தை திருத்தம் செய்தல்

விசேடமான சூழ்நிலைக்கு ஏற்றவான விடயங்கள் காணப்படும் சந்தர்ப்பங்களில் தடுப்புக் காவலில் வைத்தல் தொடர்பான கட்டளையை நீடிக்கும் நோக்கில் குறித்தவொரு சந்தேக நபரையோ அல்லது குற்றவாளியையோ நீதிபதிக்கு பிரத்தியேகமாக முன்னிலைப்படுத்த தேவையின்றிய வகையில் நடபடிமுறைகளை இணைத்துக் கொள்வதற்காக 144அ உறுப்புரைக்கு மற்றும் ஏதெனுமொரு வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் இடம்பெறுமானால் அல்லது ஏதெனுமொரு குற்றவாளிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டிருப்பின் குறித்த குற்றவாளி மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் பிரத்தியேகமாக முன்னிலைப்படுத்தத் தேவையின்றிய வகையில் நடபடிமுறைகளை இணைத்துக் கொள்வதற்காக 214அ உறுப்புரைக்கு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் கட்டிடத்தொகுதி உரிமத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

கட்டிடத்தொகுதியை குத்தகை அடிப்படையில் வழங்கல், குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் கட்டிடத்தொகுதியை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பான விடயங்களைக் கருத்தில் கொண்டு, குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் கட்டிடத்தொகுதிக்கான உரிமத்தை துரிதமாக மீளப் பெறுவதற்கான புதிய சட்டமொன்றை வகுப்பதற்கான அடிப்படை சட்டமூலமொன்று நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகை தொடர்பான சட்ட ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டம் வகுக்கப்படுவதன் மூலம் முறையான நடபடிமுறைகளின் கீழ் பொதுவான வாடகை மற்றும் வெளியேற்றல் போன்ற வழக்கு நடவடிக்கைகளில் ஏற்படும் சட்டத் தாமங்களைத் தவிர்த்து குறுகிய காலத்தில் குத்தகைதாரருக்கு சலுகை வழங்குவதற்கு இயலுமை கிட்டும். அதற்கமைய, குறித்த பணிக்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 1972 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

வறுமைக்குட்பட்டவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் வறுமைப்பட்ட வாடகைக் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக 1972 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது வீட்டு வாடகைச் சட்டத்தில் காலங்கடந்த ஏற்பாடுகள் மூலம் வீட்டுத் துறைக்கு, வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதிகளுக்கும் சொத்துப் பரிவர்த்தனைகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த சட்டத்தை திருத்த வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கபட்ட சட்ட ஆலோசனைக் குழுவால் வீட்டு வாடகை சட்டத்திருத்திற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த குழு அறிக்கை மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி வீட்டு வாடகைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தப்பட்ட சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு

தற்போது உள்ளூரில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி போதியளவு அரிசித் தொகையை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், மேலதிக களஞ்சிய இருப்பைப் பேணுவதற்கு இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அவ்வாறே தற்போது காணப்படும் அரிசிக்கான உயர்ந்தபட்ச விலையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − 32 =

Back to top button
error: