இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று முன்தினம் 28 ஆந் திகதி சந்தித்தார்.
வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக பேராசிரியர் பீரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் து, மியன்மாரின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடாத்துதல் உட்பட நாட்டில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினார்.
இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூறிய அதே வேளை, இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூண்கள் பௌத்தமும் கலாச்சாரமுமாகும் என அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
மியன்மார் மக்களின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் அவை அவசியமாதலால், மியன்மாரிலுள்ள அனைத்தையும் உள்ளடங்கிய ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அது வலுவாக ஆதரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள மியன்மார் தூதரகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.