இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று( 03) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டுகளில் ஈடுபட்டார் இதன்போது தலதா மாளிகையின் தியவடன நிலமே வெளியுறவு செயலாளரை வரவேற்றார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்த அவரை இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கை வெளிவிவகார செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் இங்கு 5 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.
இந்த விஜயம் நீண்டகால பல தரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். வெளியுறவுச் செயலாளர் இலங்கை வெளியுறவுச் செயலாளருடனான இருதரப்புக் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார் என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்