இலங்கை விஜயம் செய்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று (03) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முனையத்தை பார்வையிடுவதற்காகவே இந்திய வௌியுறவு செயலாளர் அங்கு சென்றார்.
இந்திய எண்ணெய் நிறுவனத்தின் புதிய உற்பத்தியொன்றை வௌியிட்டு வைத்த அவர், பின்னர் எண்ணெய் குதங்களையும் பார்வையிட்டார். எண்ணெய் குதங்களின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வௌியுறவுத்துறை செயலாளர் ஆராய்ந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் இந்திய எண்ணெய் நிறுவனம் இதன்போது வௌியுறவுத்துறை செயலாளரை தௌிவுபடுத்தியதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தும் சுமார் 20 எண்ணெய் குதங்கள் திருகோணமலையில் அமைந்துள்ளன. குறித்த எண்ணெய் குதங்கள் அமைந்துள்ள பகுதியை கண்காணித்த வௌியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்ட குழுவினர் ஏனைய குதங்கள் அமைந்துள்ள பகுதியூடாகவே அங்கிருந்து வௌியேறினர்.
ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை 2024 ஆம் ஆண்டளவில் முடிவிற்கு வரவுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் யாழ். கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.