இலங்கையில் தேருநர்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அனுமதி வழங்கியது.
தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பர்னாந்து தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் கூடிய போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
விசேடமாக 1980 ஆம் ஆண்டு 44 இலக்க தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்துக்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த நபர்களே தேருநர்களாக பதிவு செய்யப்படுகின்றனர்.
எனினும், அந்த தினத்துக்குப் பின்னர் பிறந்த தினத்தை கொண்ட இளையோருக்கு அடுத்த வருடத்தின் மே மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும் தேர்தலிலேயே வாக்குரிமை கிடைக்கின்றது. இதனால் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு விரைவில் வாக்குரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 மார்ச் 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கமைய, நாளை (06) இந்த திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்த்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தப் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காணப்படுகின்றார்.
இந்த விசேட குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எம்.யு.எம். அலி சப்ரி, எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.