அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர், தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இன்றைய தினம் (07) கலந்துகொண்டு, தேர்தல்கள் சீர்திருத்தம் சம்பந்தமாக மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பிரேரணையை முன்வைத்தனர்.
அவர்கள் மிக முக்கியமாக பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயங்களிலே கட்சியின் நிலைப்பாட்டை இங்கு வெளிப்படுத்தியதுடன், விரிவான நீண்ட நேர கருத்தாடல்களையும் மேற்கொண்டனர்.
இதன்போது, பொதுத்தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்ற வாதங்களும் மக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அங்கு முன்வைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும், ஆரம்பகாலத்திலே இருந்த விகிதாசார முறைப்படியான தேர்தல் முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இப்பொழுது இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் அங்கு தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, விசேடமாக புலம்பெயர்ந்தவர்களினுடைய வாக்குரிமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதி விசேடமாக, வட மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு, புத்தளம் உள்ளிட்ட இதர மாவட்டங்களிலே வாழ்ந்துவரும், அதாவது இன்னும் தமது சொந்த ஊரிலே குடியேறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும், விஷேட சலுகை அடிப்படையில், அவர்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்தே, அவர்கள் விரும்பிய தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஏதாவது புதிய மாற்றங்கள் தேர்தல் சம்பந்தமாக செய்யப்பட வேண்டுமாக இருந்தால், அந்தத் தேர்தல் மாற்றங்கள் ஒரு பொதுவான, நியாயமான அடிப்படையிலே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, பழைய முறையிலே அந்தத் தேர்தலை நடத்துகின்ற போது, அதற்கு நீங்கள் சமர்ப்பிக்கின்ற பிரேரணையை ஒத்த பிரேரணையை, எவ்வாறு அந்த வாக்கு பிரயோகிக்க்கப்பட வேண்டும் என்பதற்காக, இன்னுமொரு வாக்குச் சீட்டைக் கொடுத்து, அதாவது நியூசிலாந்து முறைப்படி அல்லது ஜேர்மன் முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்தத் கருத்தாடலை சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் நெறிப்படுத்தினார்.