வட மாகாண கிராமப்புற பாடசாலைகளுக்கு இணைய வசதி வழங்கும் நிகழ்வு
SMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வட மாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின் கீழ் இரண்டாவது செயற்திட்டமான ” கிராமப்புற பாடசாலைகளுக்கு இணையவசதி வழங்கும் நிகழ்வு” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், மாகாண கல்வித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு.தி. ஆயவன், தீவக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் திரு.கு.சிவராம், அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட தொடர்பாடல் தொழில்நுட்ப கிளையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் ” மாவட்டத்தின் கல்விவளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால், வட மாகாண கல்வியமைச்சிற்கு உதவும் நோக்கத்துடன் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் ஸ்மாட் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவியினூடாக இத்திட்டத்தின் முதற்கட்டமாக கணனி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதற்கான இணையவசதியை வழங்கும் நோக்கில் பொறியியலாளர் திரு. தி.நித்தியானந்தன் (CARE FOR EDUCATION) அவர்களின் நிதி அனுசரணையில் இன்றையதினம் இணைய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தீவக வலயப் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் 17 தீவக வலயப் பாடசாலைகளுக்கும் மற்றும் 07 வலிகாம வலயப் பாடசாலைகளிற்கும், 01 யாழ். வலயப் பாடசாலைகளுக்கும் இணையவசதி உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை சரியான வகையில் பயன்படுத்த அதிபர் மற்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவவேண்டும். மேலும் தொடர்ச்சியாக தேவையான உதவிகளை எதிர்காலத்தில் வழங்க யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தயாராக உள்ளது” எனவும் தெரிவித்தார்.