சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு
சர்வதேச உள நல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வுவென்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் குறித்த நிகழ்வானது நேற்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மாவட்டம் கடந்த 2 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில் இறுக்கமான மனநிலையில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
தற்போதைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள நலம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் செயற்படும் உள நல உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை தெளிவுபடுத்தும் வண்ணம் குறித்த செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்கள், மகளிர் மற்றும் முதியவர்களை எவ்வாறாக உள நல ஆற்றுகை மேற்கொள்வது, அத்தோடு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களை உள நல ரீதியாக எவ்வாறு ஆற்றுகைக்கு உட்படுத்துவது போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வானது மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான அருட்தந்தை போல் சற்குணநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், உள நல விசேட வைத்திய நிபுணர்களான வைத்தியநிபுணர் கடம்பநாதன், பிராந்திய சுகாதார வைத்தியகிகாரி பணிமனையில் உள நல பிரிவின் பொறுப்பாளர் வைத்தியநிபுணர் கே.அருள்ஜோதி, ஏறாவூர் வைத்தியசாலையின் உள நல பிரிவின் வைத்திய நிபுணர் டான் சௌந்தரராஜா, 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உள நல ஆலோசனை உத்தியோகத்தர்கள் மற்றும் உள நல உதவி நிலையத்தின் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.