பனை வளம் தொடர்பான பாடநெறிகளையும் பெருந்தோட்ட பயிர்கள் சார்பான பல்கலைக் கழக வளாகத்தின் பாடத் திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
இது தொடர்பான ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட பயிர்களுக்கான பல்கலைக்கழக வளாகம் அமைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ஆகியோரின் இணைந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பாக நேற்றைய (24) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போதே மேற்குறித்த கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு கோடி பத்து இலட்சம் பனை மரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 96 வீதமானவை வடக்கு கிழக்கு பிரதேசத்திலேயே காணப்படுகின்றன.
எம்மிடம் இருக்கின்ற பனை வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுமாக இருந்தால், நாட்டின் பொருளாதாரத்திற்கான அந்நிய செலாவணியை கணிசமானளவு பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் போஷாக்கான உணவுப் பண்டங்களையும் உற்பத்தி செய்ய முடியும் ஆனால், தற்போது 20 வீதமான பனை வளங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன.
பனைசார் தொழில் தொடர்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் காணப்படுகின்ற புரிதல் இன்மையும் பனை வளம் தொடர்பான தொழில்களில் மக்களின் ஆர்வம் குறைவதற்கு காரணமாக இருக்கின்றது.
பனை வளம் தொடர்பான பாடநெறிகயைும் பல்கலைக் கழக பாடத் திட்டத்தினுள் உள்ளடக்குவதன் மூலம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு தொழில் நடவடிக்கைகளை வினைத் திறன்மிக்கவையாக மாற்ற முடியும் இதன்மூலம், ஏனைய பெருந்தோட்டப் பயிர்களைப் போன்றே கணிசமான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.