இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பர்ல் (X-PRESS PEARL) கப்பலில் தீ பரவி வருகின்ற நிலையில் மீண்டும் இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளதக்க அறிவிக்கப்படுகிறது
இந்த கப்பலில் வைக்கப்பட்டிருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில், இரசாயன பொருட்கள் காணப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தைதொடர்ந்து இலங்கை கடற்படையினர் கப்பலிலிருந்த 25 பேரை மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்டவர்களில் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் கப்பலிலுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபை ஆகிய தரப்பினர் இணைந்து, கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.