இலங்கை பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டுவரக்கூடிய 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துணி உற்பத்தியாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விசேட துணி உற்பத்தி வலயம் கைத்தொழில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் ஒருங்கிணைப்பில் இலங்கை முதலீட்டு சபையினால் செயற்படுத்தவுள்ளதாக இங்கு புலப்பட்டது.
வெளிநாட்டு சந்தைகளை இலக்காக கொண்டு உயர் தரத்திலான துணிளின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு இதுவரை ஏறாவூர் பகுதியில் இரண்டு தொழிற்சாலைகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகர இதன்போது குழுவில் விளக்கமளித்தார்.
நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் வரி நிவாரணங்களை விட மேலதிக நன்மைகள் இந்தத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நியாயமற்றது என இது தொடர்பில் தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா சுட்டிக்காட்டினார்.
இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாத்திரம் எல்லையற்ற வாய்ப்புக்களை வழங்கும் திறந்த காசோலையொன்றை வழங்குவது போன்ற சந்தர்ப்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதன்போது குறிப்பிட்டார்.
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துணி உற்பத்தியாளர்களை நோக்காகக் கொண்ட வலயமே அல்லாமல் ஆடை தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதல்ல என இதன்போது கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.
நாடு தற்பொழுது முகங்கொடுத்துவரும் நிலைமையில் இவ்வாறான முதலீட்டு வாய்ப்புக்கள் மிகவும் முக்கியமானது என ஏற்றுக்கொண்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா, எனினும் அனைத்து துணி உற்பத்தியாளர்களுக்கும் சம வாய்ப்புக்கள் மற்றும் வரி நிவாரணங்கள் வழங்கப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டியதுடன், அந்தத் திருத்தங்களுக்கு அமைய ஏறாவூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்தும் அமைச்சினால் மேல் மாகாணத்தில், கொழும்பு 02 க்ளெனீ வீதியில் ஒருங்கிணைந்த விடுமுறை விடுதி திட்டத்தின் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு 2021 ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
, 2022 வரவுசெலவுத்திட்ட மதிப்பீடு தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் முழு செலவுகளுக்கும் இந்தக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டதுடன், தமது அலுவலகத்துக்கு சர்வதேச பயிற்சி நிலையமொன்றை ஹொரண பகுதியில் நிர்மாணிக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என கணக்காய்வாளர் நாயகம் சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.
புதிய கட்டுமானங்களுக்காக வரவுசெலவுத்திட்டம் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை தயாராக இல்லை என இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல சுட்டிக்காட்டியதுடன், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தேவையை தான் ஏற்றுக்கொள்வதாகவும் இதுவரை பல அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத கட்டடங்கள் காணப்படுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
ஒன்லைன் ஊடாக இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹர்ஷ டி. சில்வா ஆகியோரும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.