வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள 13 வீடுகளிற்கான பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் பெறுமதியான முதலாம் கட்ட காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) வியாழக்கிழமை இடம்பெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தட்சனகௌரி டினேஸ் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்துள்ளார்.
இதன்போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் நிர்மானிக்கப்படவுள்ள வீடுகளிற்கான 13 பயனாளிகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 13 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்றாற்போல் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன்,
இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.