கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆந் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி திணைக்கள அதிகாரிகள் வலயங்கள் ரீதியாக முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாடசாலைகளை துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் (திராய்மடு) துப்பரவு பணிகள் நேற்று (19) இடம்பெற்றது.
இச் செயற்பாட்டினை பார்வையிடுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் குறித்த வித்தியாலயத்திற்கு வருகை தந்திருந்ததுடன் குறித்த துப்பரவுப் பணிச் செயற்பாட்டினையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் குறைபாடுகள் மற்றும் பாடசாலைக்கான விடுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதற்கான தீர்வுகளை பெறும் வழிகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.என்.பிள்ளைநாயகம், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.