வட கொரியா – அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் – அமெரிக்க தூதுவர்
அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக வட கொரியா – அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் சங் கிம் கூறும்போது, “ கொரிய தீபகற்பம் முழுவதும் அணுஆயுதம் இல்லாமல் இருத்தலே எங்கள் இலக்கு. கடந்த ஆறு வாரங்களாக வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளை பிராந்தியத்தில் அமைதியை குறைந்துள்ளது. இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் பிற சீர்குலைக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வட கொரியாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதன் ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை. நாங்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் ராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானது என்று சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலையில் நடந்து கொள்வதாக வட கொரியா குற்றம் சாட்டியது. ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வட கொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏவுகணை சோதனை காரணமாகவே அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் மோதல் நிலவியது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அந்நாட்டின் மீது அமெரிக்க விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.(இந்து)