இலங்கையில் நிலவும் கொவிட் சூழல் காரணமாக இவ்வருடத்தில் அரசாங்கம் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி அண்மையில் (22) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவித்தார்.
மதுவரித் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 160 பில்லியன் ரூபாவாக இருக்கின்றபோதும், இந்த இலக்கை எட்டுவது சிரமாக இருக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
மதுவரித் திணைக்களம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கை மற்றும் அத்திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து பார்க்கும் நோக்கில் கடந்த 22ஆம் திகதி கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அக்குழு கூடியபோதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.