இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய காரியாலயம் மற்றும் விற்பனை நிலையம் இன்று (04) தம்பலகாமம் பிரதேசத்தில் கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை மற்றும் சிறு பெருந்தோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவினால் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 10000க்கு மேற்பட்ட மரமுந்திரிகைக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் இன்னும் பல மர முந்திரிகைக்கன்றுகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் இதன் மூலம் குறுகிய காலத்தில் உயர் வருமானத்தைப் பெறக்கூடியதாக அமையும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் பல்வேறு தேவைகளை வேண்டி நிற்கின்றது.அன்று பயத்திற்கு மத்தியில் வாழ்ந்த சூழ்நிலை மாறி நிம்மதியாக வாழவைத்த பெருமை ராஜபக்ச குடும்பத்தினை சாரும்.இன்று மாவட்டத்தில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன, மத, மொழி வேறுபாடின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமானவற்றை உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மரமுந்திரிகைக்கன்றுகள் அமைச்சரினால் வழங்க வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி, தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் சம்பிக்க பண்டார, அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.