இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், மீண்டும் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்க ஆரம்பித்தது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான காலப் பகுதியில் இலங்கையின் பிரதான வருமானமான சுற்றுலாத்துறை முற்று முழுதாக பாதிக்கப்பட்டது. இலங்கை பொருளாதாரத்தில் எந்தவித பாரிய பிரச்சினைகளும் இல்லாமல் இருந்த காலம் 2018 வரைதான்.
2018ம் ஆண்டு இலங்கைக்கு 23.34 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு 19.14 லட்சமாக குறைவடைந்தது.
அதன் பின்னர், உலகையே அச்சுறுத்தும் கோவிட் வைரஸ் தாக்கம் இலங்கையின் பொருளாதாரத்தை முற்று முழுதாகவே பாதிப்படைய செய்தது. இலங்கைக்கு 2020ம் ஆண்டு 5.08 லட்சம் சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் பிரதான வருமான மார்க்கமாக விளங்கும் சுற்றுலாத்துறை மாத்திரமின்றி, ஏனைய அனைத்து துறைகளும் முற்று முழுதாகவே பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையின் ஏற்றுமதி துறையும் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதையடுத்து, நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதை, அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கடந்த சில மாத காலமாக கோவிட் பரவல் காரணமாக நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டிருந்தது.இந்த பயணக் கட்டுப்பாடு கடந்த 31ம் தேதி அதிகாலையுடன் தளர்த்தப்பட்ட பின்னணியில், அன்று முதலே குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நோக்கி இளைஞர், யுவதிகள் அதிகளவில் படையெடுக்க ஆரம்பித்தனர்.
நூற்றுக் கணக்கான இளைஞர்கள் என்பதை விட, ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நாட்டிலுள்ள அனைத்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலக வாசல்களிலும் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இவர்கள் வேறு நாடுகளை நோக்கி பயணிக்கும் நோக்குடன், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுக்கொள்வதற்காகவே குடிவரவு, குடியகல்வு திணைக்கள வாசல்களில் திரண்டுள்ளனர்.
”நாட்டிலுள்ள பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காகவே வெளிநாடுகளை நோக்கி பயணிக்கின்றனர். வெளிநாட்டவர்கள் களியாட்டங்களுக்காகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் இலங்கைக்கு வருகைத் தருகின்றனர். இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் இருக்கமானால், இங்கு இருந்துக்கொண்டே பொருளாதாரத்திலும் வலுப் பெற்று, மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். ஆனால் தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற முடியவில்லை. அதனாலேயே வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கின்றோம்” என குடிவரவு குடியகல்வு திணைக்கள வாசலில் காத்திருந்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் படகுகளில், சட்டவிரோதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலங்கையர்கள் தப்பிச் சென்றிருந்தனர். எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வது பாரிய அளவில் குறைவடைந்திருந்தது.
எனினும், இந்த கொரோனா தாக்கத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலையில், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.(பிபிசி)