இலங்கையில் பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்படும் புற்று நோய் சிகிச்சை நிலையத்தின் முதற்கட்டத்தை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் விழாவில் அமைச்சர் உரையாற்றினார்.
இந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையம் கண்டி தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் 12 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படுகிறது. இது 600 கட்டில்களைக் கொண்டதாக 195 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
நேற்று (11) நடைபெற்ற இந்த நிகழ்வில் இது குறித்து அமைசர் மேலும் தெரிவிக்கையில்
,தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது தொடர்பான யோசனை சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமா அதிபர் நேற்று பதில் அளித்துள்ளார். இதன் பிரகாரம், இரு தடுப்பூசிகளையும் பெறாத ஒருவர் பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடை செய்யவதற்கு சட்ட சிக்கல்கள் இல்லையென கூறினார். இந்த விதிமுறையை அமுலாக்க ஸ்மார்ட்-போன் அப் முதலான தொழிலநுட்பங்களைப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது இலங்கையின் வைத்தியசாலை ஒன்றிற்குள் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை நிலையமாகும். புதிய சிகிச்சை நிலையம் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக கூடுதல் வசதிகளையும், நவீன கருவிகளையும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
மத்திய மாகாணத்தில் எவருக்கேனும் புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில், அவரை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு அனுப்பும் தேவை இருக்காது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறினார்