ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை இந்திய நட்புறவு சங்கத்தின் (Sri Lanka – India Parliamentary Friendship Association) தலைவராக நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் (11) தெரிவு செய்யப்பட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கலான 100ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதித் தலைவர்காளகத் தெரிவு செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா செயலாளராகவும், கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உதவிச் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் புவியியல் ரீதியான நெருக்கம் மாத்திரமன்றி, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காணப்படும் வரலாற்று நெருக்கத்தையும் புலப்படுத்துகின்றன என்று இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரு ஜனநாயக நாடுகளுக்கிடையிலான பாராளுமன்றப் பரிமாற்றங்கள் மற்றும் ஊடாடல்களுக்கு புத்துயிர் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
விசேடமாக, பொருளாதார பெறுமானங்களை பகிர்வதை மேம்படுத்துதல், பொதுவான சவால்களை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பு, மக்கள்-மக்கள் தொடர்புகளில் மேம்பாடு, சிறந்த பொருளாதார ஈடுபாடுகளை ஊக்குவித்தல், கலாசார தொடர்புகளை வலுவாக்குதல் மற்றும் அபிவிருத்தி பங்குடமையின் நற்பலன்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு பன்முக உறவுகளை மேலும் வலுவாக்குவதற்கு இந்த அமைப்பானது ஆதரவாக அமையும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவான உறவுகளை வளர்க்க வழி வகுத்துள்ளன என்றார்.