crossorigin="anonymous">
உள்நாடுபொது

மொஹிதீன் அவர்களின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் ஆழந்த அனுதாபம்

வரலாற்று ஆய்வாளரும் பன்னூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவு இத்துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள (14) அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“83 வருடங்கள் வாழ்ந்து ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பல சமூகப் பணிகளில் அயராது ஈடுபட்ட மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி முதலான அமைப்புகளில் முக்கிய பங்காற்றியவர்.

முஸ்லிம் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் நூற்றுக்கணக்கான வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மகத்தான பணியாற்றியவர். குறிப்பாக யுத்த கால இழப்புகளை துல்லியமாக ஆவணப்படுத்தியிருந்தார். அக்காலத்தில் வட கிழக்கில் முஸ்லிம்களுக்குரிய காணி உறுதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

ஆழ்ந்த சமூக ஈடுபாடு கொண்டவரும் அரசியல் செயற்பாட்டளருமான இவர், யுத்த காலத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையிலிருந்து முன்னாள் அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் சென்ற முஸ்லிம் தூதுக் குழுவில் அங்கம் வகித்து சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பங்களிப்புச் செய்தார்.

தேர்தல், எல்லை நிர்ணய விடயங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர், அது தொடர்பில் சமூகத்திற்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார்.

இவர் ஆற்றிய காத்திரமான ஆய்வு, எழுத்து மற்றும் பல்வேறு சமூகப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதனது 20வது ஆண்டு நிறைவு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களின் பல்துறைப் பங்களிப்புகள் நன்றியுடன் நினைவு கூரத்தக்கவை. அவர் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர். அவர் ஆற்றி வந்த பணிகள் தொடர வேண்டும். அவரைப் பின்துயர்ந்து வரலாற்று ஆய்வுப் பணிகளை தொடர ஒரு குழு தயாராக வேண்டும். அவைதான் அவரை நினைவுகூருகின்ற மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.

அவர் மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவனபதியில் நுழைய வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு வல்ல இறைவன் அழகிய பொறுமையை நல்குவானாக!” எனவும் மீடியா போரம் விடுத்துள்ள (14) அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 + = 94

Back to top button
error: