ரஷ்யா விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை
விண்வெளி ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா, விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்துள்ளது. இந்த சோதனையில் ரஷ்யா, தனது ஏவுகணையின் மூலமாகச் செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட தனது சொந்த செயற்கைக்கோளை அழித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர், ரஷ்யாவின் இந்த சோதனை ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சோதனையால் இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய கழிவுப் பொருட்கள் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் உருவாகியுள்ளது எனவும், அது லட்சக்கணக்கான சிறிய சுற்றுவட்டப் பாதை குப்பைகளை உருவாக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாசா நிர்வாகி பில் நெல்சன், இந்த பொறுப்பற்ற, ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கையால் கோபமடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், “மனிதர்களின் விண்வெளிப் பயணத்தில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட ரஷ்யா, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் அமெரிக்க மற்றும் சர்வதேச விண்வெளி வீரர்களை மட்டுமின்றி தனது சொந்த விண்வெளி வீரர்களையும் ஆபத்தில் ஆழ்த்தும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
பிரிட்டனும் ரஷ்யாவின் இந்த சோதனைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், ‘ரஷ்யாவின் இந்த அழிவுகரமான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையானது, அந்தநாடு விண்வெளியின் பாதுகாப்பு, மற்றும் நிலைத்தன்மையை முற்றிலும் புறக்கணிப்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.(நக்கீரன்)