அநுராதபுரம் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரத்தை, உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
தாய் நாட்டின் ஒற்றுமைக்காகப் பெரும் தியாகங்களைச் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையிலும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு ஆசிர்வதிப்பதற்கும், முப்பது வருடகால யுத்தத்தின் நிறைவைக் குறிக்கும் வகையிலும், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவுக்கமைய, அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் “சந்தஹிரு சேய” தாது கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினருடன், ஏனைய பலரும் இதற்கு நிதி மற்றும் உடல் ரீதியிலான பங்களிப்புகளை நழ்கியுள்ளனர்.
கி.பி 301இல் மகாசேன மன்னனால் அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜேதவனாராம விஹாரையை அடுத்து இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட அதி விசாலமான தாது கோபுரம் இதுவாகும்.
2010.11.22ஆம் திகதி “சந்தஹிரு சே” தாது கோபுரத்துக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2014.11.22இல் புண்ணிய சின்னம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
282 அடி 6 அங்குலம் உயரமான இதன் சுற்றுவட்டம் 800 அடிகளாகும். குமிழி வடிவத்திலான இந்தத் தாது கோபுரத்தில், கப்பிலவஸ்து புண்ணிய சின்னம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. தாது கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சூடா மாணிக்கத்தின் உயரம் 3 அடி 6 அங்குலமாகும். இங்கு 1895 மாணிக்கக் கற்கள், தங்கம் மற்றும் முத்து என்பன பதிக்கப்பட்டுள்ளன.
பிரித் பாராயணத்துடனும் தேவ ஆராதனையுடனும் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரம், ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது. மஹாசங்கத்தினர் உள்ளிட்ட பிரதம அதிதிகள், தாது கோபுரத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தாது கோபுரத்துக்கு ஆபரணம் அணிவித்தல், புண்ணிய விளக்கேற்றுதல் “சந்தஹிரு சே ரந்துன்”ஐ சம்புத்த சாசனத்துக்கு அர்ப்பணித்தல் மற்றும் மின்விளக்கு வழிபாடுகள் என்பன, ஜனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்பட்டன.
தாது கோபுரத்துக்கு முதலாவது கிலன்பச (ஆகாரம்) பூஜை “சந்தஹிரு சேய” வரலாறு அடங்கிய நூலை கையளித்ததோடு, பக்திப் பாடலும் இசைக்கப்பட்டது.
இந்தத் தாது கோபுரத்தை வழிபடும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணித்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் நன்மைகள் சென்றடைவதாக, இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
இந்நாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளான எமது பாதுகாப்புப் படையினர் தொடர்பில் தமக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்த பிரதமர் அவர்கள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பிரிவை, அன்று பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மிகச் சரியாக வழிநடத்தி, நாட்டில் அமைதியை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்றினார் என்றார்.
இந்நிகழ்வில் மூன்று நிக்காயாக்களினதும் மஹாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹாசங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், பாதுகாப்புச் செயலாளர், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புபட படையின் பணிப்பாளர் நாயகம், இராணுவ வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.