இலங்கை கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் நாளை திங்கட்கிழமை (22) முதல் தினசரி வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்க முடியுமென வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற இலத்திரனியல் ஆவணச் சான்றுப்படுத்தல் தொகுதியில் (e-DAS) ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவதில் நீண்ட காலத் தாமதம் ஏற்பட்டதாக, அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளது.
பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உள்ள கிளை சான்றளிப்பு தொகுதிகள் (System) பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
மேலதிக தகவல்களுக்காக 011- 2338812 அல்லது dgcons@mfa.gov.lk மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை தொடர்பு கொள்ளலாம்.