கலைஞர்கள் கௌரவிப்பும் கலைஞர் சுவதம் – 2020 விருது கையளிப்பும்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையில் தேசத்தின் கலை மற்றும் கலாசாரத்தினை மிளிரச்செய்யும் பொருட்டு காலந்தொட்டு கலைஞர்களால் ஆற்றும் அரும்பெரும் சேவையை கௌரவித்து ஒவ்வொரு வருடமும் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் 2020 ஆம் வருடத்திற்கான கலைஞர்கள் கௌரவிப்பும் கலைஞர் சுவதம் விருது விழாவும் கொரோனா அசாதாரண நிலை காரணமாக இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்றது.
இதன்போது அந்நிகழ்விற்கு சுகயீனம் காரணமாக வரமுடியால் இருந்த கலைஞர்களை வீடு தேடிச் சென்று கௌரவிக்கும் நிகழ்வு இறக்காமம் கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் இன்று (22) திங்கள் கிழமை இடம்பெற்றது.
இதன்போது இறக்காமம் – 08 ஆம் பிரிவில் வசிக்கும் திரு. ஏ.எம்.எம். குத்தூஸ் அவர்கள் கிராமிய ஆயுர்வேத சித்த வைத்தியம் மற்றும் தற்காப்புக் கலைக்கு இதுவரை காலமும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து ஆற்றிவரும் கலைப்பங்களிப்புக்காக சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இறக்காமம் – 07 ஆம் பிரிவில் வசிக்கும் திரு. விக்டர் குமாரசிங்க அவர்கள் டபேலா மற்றும் டோல்கி இசை வாசிப்பில் தாம் ஆற்றிவரும் சேவைக்காக சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரதேச செயலக கலாச்சார பிரிவின் அனுசரைணையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மத்திய கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ஏ.எல். பரீனா, மாகாண கலாச்சார உத்தியோகத்தர் திருமதி டப்யூ.டி. வசந்தா, முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் ஐ.இப்ராலெப்பை ஆகியோரும் சிறப்பித்தனர்.
மேலும் கலாச்சார அதிகார சபை சார்பாக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் உட்பட பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர்களான யூ.எல். அமீர், எம்.ஜே.எம். அத்தீக் ஆகியோரும் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.