“இணைய வழி குற்றமம் பதின்ம வயதினர் எதிர்நோக்கும் சவால்களும்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
இணையத்தளத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளல் இணையத்தளம் பிள்ளைகளின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கை வளர்ப்பதற்குக் காரணமாகின்ற போதிலும் பிள்ளைகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தும்போது அதில் உலாவரும் துஷ்பிரயோகம் செய்வோரின் பிடியில் சிக்குகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றமை துரதிஷ்டவசமான சம்பவங்களின் மூலம் தெரியவருகின்றது.
மேற்படி கருப்பொருளின் பாடசாலை மாணவம்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எஸ்.சபறுல் ஹஸீனா அவர்களின் ஏற்பாட்டில் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். அமீன் அவர்களின் தலைமையில் சது-அல் அஷ்ரப் தேசிய பாடசாலையில் இன்று (22 ) திங்கள் கிழமை நடைபெற்றது.
தற்போதைய கொரோனா தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பிள்ளைகள் கூடுதலாக இணையத்தளத்தைப் பயன்படுத்த முற்படுவதுடன் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இது தற்காலத் தேவையொன்றாக மாறியுள்ளது .
பிள்ளைகள் பாதுகாப்பாக இணையத்தளத்தைப் பயன்படுத்த பழக்கப்படுத்துவதும் இணைய வழி குற்றச் செயல்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பெற்றோரை அதுபற்றி அறிவுறுத்துவதும் , பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற இணையத்தள துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் .
இதனடிப்படையில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் மாணவர்கள், பெற்றேர் மற்றும் முதியவர்களான சமுதாயத்தினருக்கு தனித்தனியாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நடாத்திவருகின்றது.
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப் பிரதம வளவாளராக பங்கேற்று விஷேட விழிப்புணர்வு அமர்வை நடத்திவைத்தார்.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டதோடு பாதுகாப்பான இணையப் பாவனையும் மாணவர்களின் வகிபாகமும் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வை நடாத்திவைத்தனர்.