crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைத்து வர நாவடிக்கை

இலங்கை உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்த நிலையில், சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரனுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் நேற்று (26) சிறப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீள அழைத்து வருவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. இந்தியாவிலிருந்து அழைத்துவரப்படவுள்ள இலங்கையர்களுக்கு செய்துக்கொடுக்கப்படவுள்ள வசதிகள் குறித்து பிரதி உயர்ஸ்தானிகர், கடற்றொழில் அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

அழைத்துவரப்படவுள்ள இலங்கையர்களுக்கான பயண ஏற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் இலவசமாக செய்து கொடுக்கப்படவுள்ளது.அத்துடன், அவர்களின் பொருட்களை ஏற்றி வருவதற்கான ஏற்பாடுகளும் செய்துக்கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைக்கு அழைத்து வரப்படுவோரின் செலவுகளுக்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபா வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அழைத்து வரப்படுவோரை தமது பூர்வீக நிலங்களில் குடியமர்த்துவற்கும், அந்த நிலங்களில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு, அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை, அவர்களது பூர்வீக நிலங்களின் குடியமர்த்தி, இயல்பு வாழ்க்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க அரசாங்கம் தயார் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கிறார்.

பல்வேறு காரணங்களினால் இந்தியாவின் சிறப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என, பிரதி உயர்ஸ்தானிகரிடம், டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் அமைப்பின் பதில் – அகதிகள் தொடர்பிலான உடன்படிக்கையொன்றை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து கைச்சாத்திடும் பட்சத்தில், தமது தாயகத்திற்கு செல்ல இந்தியாவிலுள்ள பெரும்பாலான இலங்கை அகதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் தெரிவிக்கிறது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 − 21 =

Back to top button
error: