இலங்கையில் தேர்தல் பிரசாரங்களின் போது இலத்திரனியல் ஊடகங்கள் நியாயமான கட்டணத்தை அறவிடாமை பாரியதொரு பிரச்சினை என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும், சபை முதல்வருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தேர்தல் பிரசார காலத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்படுகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்றையதினம் (26) பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தனர். எம்.ரி.வி, எம்.பி.சி ஊடக வலையமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் அசோக டயஸ் குறிப்பிடுகையில், இலங்கையில் வெகுஜன ஊடகங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய தேர்தல் சட்டங்களில் ஒருமித்த தன்மையைக் காண முடியவில்லையென்றார்.
இவ்வாறான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது ஊடகத்துறையின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்கள் கடைப்பிடிக்கப்படும் அமைதியான காலப்பகுதியிலும் கூட கேபிள் மற்றும் சட்டல்லைட் தொலைக்காட்சி அலைவரிசைகளில் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதாகவும் அசோக டயஸ் சுட்டிக்காட்டினார்.
தமது வலையமைப்பின் கீழ் உள்ள அலைவரிசைகளில் சகல அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புக் கிடைக்கும் வகையில் அறிக்கையிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்சான் ஊடக வலையமைப்பு சார்பில் இக்குழுவில் கருத்துத் தெரிவித்த ரி.என்.எல் செய்தி முகாமையாளர் டிரான் கரன்னாகொட குறிப்பிடுகையில், தேர்தல் விளம்பரங்களுக்காக ஊடக நிறுவனங்களினால் அறவிடப்படும் கட்டடணங்களில் பொதுவான தன்மையொன்று காணப்பட வேண்டும் என்றார்.
பொதுவான தன்மையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.
வாய்ஸ் ஒப் ஏசியா ஊடக வலையமைப்பு சார்பில் குழுவில் கருத்துத் தெரிவித்த பிரசன்ன ஜெயநெத்தி, தேர்தல் காலத்தில் அரசியல் விவாதங்களுக்குத் தமது ஊடக வலையமைப்பு இலவசமாக வானலைக் காலத்தை வழங்குவதாகக் கூறினார்.
தேர்தல் அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு குறைந்தது ஒழுக்கக் கோவையொன்று இருக்க வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனைவிடவும், சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அதிகாரிகளும் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி நடைபெறும் என இதன் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.