இலங்கை வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான ‘அசிதிசி’ காப்புறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது.
அசிதிசி ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்திற்கு 3,000 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதில் வைபவ ரீதியாக அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 98 ஊடகவியலாளர்களுக்கு இன்றையதினம் காப்புறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது.
Softlogic Life காப்புறுதித் திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இக்காப்புறுதித் திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு ரூ. 150,000 வரையான வைத்தியசாலை செலவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வைத்தியரின் மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் பெறுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக ரூ. 20,000 ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயரதிகாரிகள், திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.