crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின்சார தடை காரணமாக மக்கள் அசெளகரியம்

இலங்கை மக்கள் நேற்றைய தினம் (03) ஒரே நாளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாட்டில் கடந்த சில வாரங்களாகவே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், பிரதான எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தனது விநியோகத்தை இடைநிறுத்தியது.

இலங்கைக்கு லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் சமையல் எரிவாயுவை விநியோகித்து வருகின்றன. இந்த நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் மாத்திரம் தனது விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதுடன், லாஃப் நிறுவனம் வழமை போன்று தமது விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றது.

எரிவாயு விநியோகம் தடைப்பட்டதனால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இவ்வாறான நிலையில், உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் திரிபு, நேற்றைய தினம் முதல் தடவையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளமையை அடுத்து, நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கை முழுவதும் நேற்றைய தினம் (03) ஏற்பட்ட மின்சார விநியோக தடை காரணமாக, நாட்டின் பல்வேறு கட்டமைப்புக்களுக்கு நேரடி தாக்கம் ஏற்பட்டிருந்தது. சுமார் 6 மணி நேர மின் விநியோகம் தடைப்பட்ட நிலையிலேயே, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். நாடு முழுவதும் சுமார் 12 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இவ்வாறு தடைப்பட்ட மின்சாரம், மாலை 6 மணி அளவிலேயே வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது. மின்சார பிரதான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே, மின் விநியோக தடைக்கான காரணம் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது. மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களாக நேரத்திற்கு வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தது.

இவ்வாறான பின்னணியில், நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டதை அடுத்து, தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அந்த சங்கம் நேற்றைய தினம் மாலை அறிவித்திருந்தது. யுகதனவி மின்சார நிலைய உடன்படிக்கை உள்ளிட்ட 6 விடயங்களை முன்னிலைப்படுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில், நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமையானது, திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோக தடையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து, அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து, நீர், வங்கி, வர்த்தகம், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. மின்சார விநியோகம் தடைப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தன. இதனால், பிரதான நகரங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. வீதிகளில் வழமைக்கு மாறாக, பெரிதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் போக்குவரத்து நடவடிக்கைகளும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தன. பல ரயில் சேவைகள் தாமதமாகவே, பயணித்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

மின்சாரம் தடைப்பட்டமையினால், குழாய் நீர் விநியோகத்திற்கும் சில பிரதேசங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்திருந்தது. கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பிரதான நகரங்களிலேயே, இந்த குழாய் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டது.

குழாய் நீர் விநியோகம் தடைப்பட்டதை அடுத்து, மக்கள் நீரின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதேவேளை, தன்னியக்க இயந்திரத்தின் மூலமாக பண பரிமாற்று நடவடிக்கைகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டிருந்தன. மின்சார விநியோகம் தடைப்பட்ட நிலையில், வீதிகளில் பெருத்தப்பட்டிருந்த பண பரிமாற்று இயந்திரங்கள் செயலிழந்திருந்தன.

இதனால், பண பரிமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் உள்ளாகியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அத்துடன், மின்சார விநியோகம் தடைப்பட்ட நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் இல்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி சென்றிருந்தன.

அதேவேளை, வர்த்தக நிலையங்களில் நடவடிக்கைளும் பாதிக்கப்பட்டிருந்தன. இலங்கை அவ்வப்போது சில பிரச்னைகளை சந்தித்து வந்தால், பல்வேறு பிரச்சினைகளை ஒரே நாளில் ஒரே தருணத்தில் சந்தித்திருந்த ஒரு சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 1 =

Back to top button
error: