திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிச் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இன்று (07) முற்பகல் 6.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கப்பல் துறை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் இளைஞர் யுவதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்று, இரண்டு பஸ்களை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.