அரச மற்றும் அரை அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் 10,000 ரூபாவினால் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்றைய தினம் (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கையினால் சில தபால் அலுவலகங்கள் மூடப்படுவதாக தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. எனினும் இன்றைய தினம் மத்திய தபால் பரிமாற்ற நடவடிக்கைகள் வழமைப்போல் இடம்பெறுகின்றன.
இதேவேளை சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரியும், தேசிய வளத்தை விற்பனை செய்வதற்கு எதிராகவும் என தெரிவித்து இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனம், துறைமுகம் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு உரித்தான தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளன.
மின்சார சபை ஊழியர்களின் பங்கேற்புடன் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திற்குள் காணப்படும் மத்திய அரசாங்கத்தின் மற்றும் மாகாண சபைக்கு சொந்தமான சகல வைத்தியசாலைகள் அதேபோல் வைத்திய நிலையங்களில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளளனர். சம்பள பிரச்சினை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மேற்கத்தேய சுகாதார ஊழியர்களுக்கு வழங்கிய 7 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு, ஆயுர்வேத சுகாதார ஊழியர்களுக்கு வழங்காமைக்கு எதிராக பொரள்ளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறும் வரும் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.