இந்தோனேசியா – மவுமேரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கை
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று (14) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100 கி.மீதொலை இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில், கடற்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் இன்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளி என ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் “ ப்ளோரஸ் கடற்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும். இந்த அலைகள் 1,000 கி.மீ சுற்றளவில் எழக்கூடும்” என எச்சரித்துள்ளது.
ஆனால், இந்தோனேசியா புவிவியல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ” ப்ளோரஸ் தீவை மையமாகக் கொண்டு கடற்பகுதியில் 12 கி.மீ ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்பதால் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். நிலநடுக்கத்தை மையமாக வைத்து 1000 கி.மீ பரப்பளவுக்கு மோசமான சுனாமி அலைகள் உருவாகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள தெற்குப்பகுதி மக்களில் 2.1 கோடி மக்கள் இந்த நிலநடுக்கத்தை லேசாக உணர்ந்தனர் என்றும், 3.47லட்சம் பேர் ஓரளவுக்கு உணர்ந்ததாகவும், 2ஆயிரம் பேர் தங்கள் வீடுகள் குலுங்கின, நில அதிர்வை அதிகமாக உணர்தோம் எனத் தெரிவித்ததாக அமெரிக்க புவிவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகளில் சிக்கி, 1.70 லட்சம் பேர் உயிரிழந்தனர்.(இந்து)