crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (13) இடம்பெற்றதுடன் அமைச்சரவைக் கூட்டத்தில்  எட்டப்பட்ட முடிவுகள்

01. டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்தல்

இலங்கையில் தற்போது டெங்கு நோய் பிரதான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவாகியுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரைக்கும் 25,910 நோயாளர்களும், 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு, மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள டெங்கு நோய்ப் பரவல், பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் மேலும் அதிகரிக்கும் போக்குக் காணப்படுவதால், தொற்று நிலைமையைத் தடுப்பதற்கான குறித்த அனைத்துத் தரப்பினரின் பங்குபற்றலுடன் அமைச்சின் ஊடாக ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த கீழ்வரும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை நிரந்தரமாக மேற்கொண்டு செல்வதற்கு அனைத்து நிறுவனத்திலும் அதற்கென ஒரு அலுவலரை நியமித்தல்

• மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் விடயங்களை மீளாய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்

• டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பாக மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் பொறுப்புக்களை ஆளுநர்களுக்கு ஒப்படைத்தல்

• டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பாக தற்போது காணப்படும் சட்ட ஒழுங்குகளை இற்றைப்படுத்தல்

• டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பாக அனைத்துச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பு செய்வதற்கான பொறுப்பை தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு ஒப்படைத்தல்

02. முன்னர் காணப்பட்ட குடியிருப்பாளர் பட்டியலுக்குப் பதிலாக ‘இலத்திரனியல் – கிராம அலுவலர்’ கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியைப் பயன்படுத்தல்

குடியிருப்பாளர் பட்டியலைப் பேணிச் செல்லும் முறை தற்போது நடைமுறையில் இன்மையால், குடியிருப்பாளர்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்தி சான்றிதழை வழங்கும் போது வாக்காளர் இடாப்பு போன்ற வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கிராம உத்தியோகத்தர்கள் கடமைகளை மேற்கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தற்போது உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் ‘இலத்திரனியல் – கிராம அலுவலர்’ (ந-புN) கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன்கீழ் குடியிருப்பாளர் மற்றும் பிரஜைகளின் தரவுத் தொகுதி தயாரிக்கப்பட்டு வருவதுடன், குறித்த கருத்திட்டத்தை 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த சமுதாய அடிப்படையிலான தரவுத் தொகுதியின் மூலம் நபரொருவரின் சமகால வதிவிடத்தை மிகவும் சரியான வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கமைய, முன்னர் காணப்பட்ட குடியிருப்பாளர் பட்டியல் முறைமையின் தேவைக்கு, தேசிய தரவுத் தொகுதியாக ‘இலத்திரனியல் – கிராம அலுவலர்’ (e-GN) கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணலும் பிரகடனப்படுத்தலும்

நகரப் பிரதேசமாக வகைப்படுத்தும் போது அதற்காகப் பிரயோகிக்கும் முக்கியமான குறிகாட்டியாக ‘நிர்வாக ரீதியான அலகு’ பயன்படுத்தப்படும். அதற்கமைய, மாநகர சபை மற்றும் நகர சபைகள் மாத்திரம் தற்போது உத்தியோகபூர்வமாக நகரப் பிரதேசங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த குறிகாட்டிகளில் காணப்படும் குறைபாடுகளால் கூடுதலாக நகரமயமாகிய பிரதேசங்கள் இன்னும் கிராமிய பிரதேசங்களாகவே இனங்காணப்படுவதால், நகரமயமாதல் பற்றிய சரியான வரைவிலக்கணப்படுத்தலின் தேவை உருவாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டு 13 இலக்க நகரங்கள் மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நகர அபிவிருத்திப் பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு பிரதேச சபை எல்லைகளில் அமைந்துள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காண்பதற்கும், குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய பிரதேச சபை எல்லைகளில் அடையாளங் காணப்படும் நகர பிரதேசங்களை நகர மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பிரகடனப்படுத்துவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான ஹொக்கயிடோ பன்கியோ பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுதல்

இருதரப்பினருக்குமிடையேயான உயர்கல்வி ஒத்துழைப்புக்காக உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஹொக்கயிடோ பன்கியோ பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

ஐந்து (05) வருடங்கள் மேற்கொள்ளப்படும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பீடங்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய ஆய்வு மற்றும் நிர்வாகப் பணியாளர் குழாம் பரிமாற்றல், மாணவர் பரிமாற்றல் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், இருதரப்பினர்களுக்கிடையே ஒன்றிணைந்த ஆய்வுகளை மேம்படுத்தல், கல்வி ரீதியான தகவல்கள் மற்றும் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. லுனுகம்வெஹெர தேசிய பூங்காவின் யால வலயம் இல VI எனப் பிரகடனப்படுத்தல்

23,499 ஹெக்ரெயார்களுடன் கூடிய யால கிழக்கு பாதுகாப்பு வன வலயம் மற்றும் உடவளவை தேசிய பூங்காவின் கிழக்குப் பகுதி, இடம்பெயரும் யானைகளின் தங்குமிடமாக 1995 ஆம் ஆண்டில் ‘லுனுகம்வெஹெர தேசிய பூங்கா’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேசிய பூங்கா யால தேசியப் பூங்காவுக்கு ஒத்த காலநிலை இயல்புகளுடன் கூடியதாக இருப்பதுடன், இரண்டு தேசிய பூங்காக்களிலும் வாழும் விலங்குளின் விசேட இயல்புகளும் ஒத்ததாகும்.

அதனால், ஒரே ஒத்த காலநிலை இயல்புகள், உயிர்ப்பல்வகைமை மற்றும் சுற்றாடல் இயல்புகளுடன் கூடிய தேசிய பூங்காக்கள் இரண்டாக பேணிச் செல்வதற்குப் பதிலாக, லுனுகம்வெஹெர தேசிய பூங்கா, யால தேசிய பூங்காவின் வலய இலக்கம் VI எனப் பிரகடனப்படுத்தவதற்காக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பிரதேச கைத்தொழில் பேட்டைகளில் காணிகளை ஒதுக்கி வழங்கல்

பிரதேச தொழிற்சாலைகள் வேலைத்திட்டமானது, பிரதேச ரீதியாக கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான வேலைத்திட்டமாகும். குறித்த வேலைத்திட்டத்திற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்காக, 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ‘பிரதேச கைத்தொழில் சேவைகள் குழு’ மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் ‘அமைச்சின் கருத்திட்டங்கள் மதிப்பீட்டுக் குழு’ கருத்திட்ட முன்மொழிவுகளின் முழுமையான மதிப்பீட்டின் பின்னர் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, மேற்குறிப்பிட்ட குழுக்கள் மூலம் 27 கருத்திட்ட முன்மொழிவுகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக 15 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களால் 4,523.34 மில்லியன் ரூபாய்களை முதலிடுவதற்கும் 2477 நேரடி வேலை வாய்ப்பு அவகாசங்களை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த முதலீட்டாளர்களுக்கு 35 வருடகால நீண்டகால குத்தகை அடிப்படையில் காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. குண்டசாலை ஹோட்டல் பாடசாலை நிறுவப்பட்டுள்ள காணியை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு ஒப்படைத்தல்

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் விருந்தோம்பல் துறை மற்றும் சுற்றுலாத் துறையில் பல்வேறு துறைகளுக்கு இளைஞர் யுவதிகளை பயிற்றுவிப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஒன்பது (09) மாகாணங்களையும் உள்ளடக்கியதாக பயிற்சி நிலையங்களை நடாத்தி வருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிர்வாகத்திலிருந்த 0.545 ஹெக்ரெயார் காணியில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் குண்டசாலை ஹோட்டல் பாடசாலை தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டல் பாடசாலை 2009 ஆம் ஆண்டில் 450 மில்லியன்கள் வரை செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டாலும், குறித்த காணிக்கான சட்டபூர்வமான உரித்து இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை.

அதனால், குறித்த காணித்துண்டை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வழங்கலாக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு ஒப்படைப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள வழங்கல் பத்திரங்களின் உள்வாங்கப்பட்டுள்ள ஒருசில நிபந்தனைகளால் வழங்கல் பத்திரங்களுக்குரிய காணிகளிலிருந்து உச்சப் பயன்களைப் பெறுவதற்கான இயலுமை இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளமையால், குறித்த நிபந்தனைகளை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் திருத்தம் செய்வதற்கு இயலுமான வகையில் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சிறுவயதுக்காரர்களுக்கான மரண தண்டனை விதித்தல், குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

நீதிமன்றத் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் எதிராக மரண தண்டனையை விதித்தல் அல்லது குறித்துக் கொள்வதோ மேற்கொள்ளக் கூடாது எனவும், குறித்த தண்டனைக்குப் பதிலாக அந்நபர் ஜனாதிபதி அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் வரைக்கும் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் தண்டனையை வழங்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 18 வயதுக்குக் குறைவாக இருப்பின் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் உட்சேர்க்கப்படவில்லை. அதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தின் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: