சிறுவர், பெண்கள் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி
சிறுவர் உரிமைகள் மற்றும் அது தொடர்பான பொலிஸாரின் வகிபாகம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரிவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை இன்று(14) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பயிற்சிப் பட்டறையினை உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு குறித்த பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக சட்ட வைத்திய அதிகாரி என்.றொஹான், சட்ட வைத்திய நிபுணர் க.வாசுதேவ, சட்டத்தரணி சி.தனன்சேயன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு சிறுவர்களை பாதுகாப்பது, சிறுவர் துஸ்பிரயோகங்களின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகள், சட்ட வைத்திய அதிகாரியின் கடமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சிப் பட்டறையில் சுமார் என்பது உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.