பிரிட்டனில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமையன்று உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு புதன்கிழமையன்று 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 8ம் தேதி 68,053 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். அப்போது அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, “இந்த எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கும்”, என்று கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சமூக கொண்டாட்டங்கள் தொடர்பாக மக்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்று கூறினார். கடந்த இரண்டு நாட்களாக, சில பகுதிகளில் பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பேராசிரியர் விட்டி, இரண்டு விதமான நோய் தொற்று நாட்டில் பரவி வருவதாக தெரிவித்தார். ஒன்று, வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் திரிபு; மற்றொன்று டெல்டா திரிபு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.(பிபிசி)