”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
”இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது,” என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவொன்று, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர், முதலில் ஆசியாவிலேயே மிகப் பழைமை வாய்ந்த நூலகமாக விளங்கும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளார். நூலகத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்களை சீனா இதன்போது கையளித்துள்ளது.
சீனத் தூதுவர், யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில், யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் கலந்துக்கொண்டிருந்தார். சீன தூதுவர், தன்னுடன் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை என யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். மாறாக தான் யாழ்ப்பாணம் நூலகத்தை காண்பிப்பதற்காகவே அங்கு சென்றதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன், சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். தமிழ் சமூகத்தின் வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும், ஐந்து நீர் சுத்திகரிப்பு நடமாடும் ஆலைகளை சீன தூதுவர், நன்கொடையாக வழங்கியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம், இந்த ஆலைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தியா எவ்வளவு தூரம்? பருத்தித்துறை கடற்கரை பகுதிக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், இந்தியாவிற்கு எவ்வளவு தூரம் என அங்கிருந்த இராணுவ அதிகாரிகளிடம் வினவினார். அதற்கு பதிலளித்த இராணுவ அதிகாரி, 30 கிலோமீட்டர் என கூறினார். இதையடுத்து, பருத்தித்துறை பகுதியிலிருந்து ட்ரோன் கேமரா மூலம் குறித்த பகுதியை சீன தூதுவர் ஆராய்ந்துள்ளார்.
இந்து கலாசார ஆடையில் யாழ்ப்பாணம் சென்ற சீன தூதுவர்- யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள சீன தூதுவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்து கலாசார ஆடைகளை அணிந்தவாறு, அவர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சீனத் தூதர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும், 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் சீனா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கையளித்துள்ளது.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் தொடர்ந்தும் காணப்பட்ட நல்லுறவு கடந்த சில காலமாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உரத்தை, இலங்கை, நாட்டிற்குள் அனுமதிக்காதிருந்த சம்பவம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது. இவ்வாறு சீன உரத்தை அனுமதிக்காத இலங்கை, இந்தியாவிடமிருந்து திரவ உரத்தை பெற்றுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்சக்தி திட்டத்தை கைவிட சீனா அண்மையில் திடீரென தீர்மானித்திருந்தது. 3வது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
குறித்த மூன்று தீவுகளையும் சீனாவிற்கு வழங்குவதற்கு, இந்தியாவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. தேசிய பாதுகாப்பு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, இந்தியா இந்த அழுத்தத்தை பிரயோகித்திருந்தது. இவ்வாறான நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, டிசம்பர் மாதம் முதல் தேதி இந்தியா பயணத்தார்.பஷில் ராஜபக்ஷ, இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்திலேயே, யாழ்ப்பாணத்தை அண்மித்து செய்யவிருந்த மின்சார திட்டத்தை கைவிடுவதாக சீனா டிவிட்டரில் பதில் அறிவித்திருந்தது.
அதேவேளை, மாலத்தீவில் 12 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் சீன தூதரகம் அன்றைய தினமே அறிவித்திருந்தது.
அதேபோன்று, யாழ்ப்பாணத்தை அண்மித்த மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டமானது, இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்தில், இந்தியாவினால்; விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த திட்டம் சீனாவிற்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த திட்டத்தை இந்தியா முன்னெடுக்கக் கோரியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்து வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் பிபிசிக்கு உறுதிப்படுத்தின.
இவ்வாறு இந்தியாவிற்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடா மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ள கருத்து வெளியாகிய இந்த நிலையில், சீன தூதுவர் உள்ளிட்ட குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட0ற்றொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கியமை பல்வேறு கேள்விகளை தோற்று வித்துள்ளது.(பிபிசி