பண்டிகை காலப்பகுதியில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் குறித்து பொலிசார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கலை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸ் நிலையங்கள் பலவற்றினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது போலி நாணயத்தாள்களை அச்சிடும் இடங்கள்பல முற்றுகையிடப்பட்டுள்ளன.
இதன்போது 5,000 ரூபா மற்றும் 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள், அவற்றை அச்சிடுவதற்கு பயன்பட்டுத்திய கணினிகள் மற்றும் மேலும் பல உபகரணங்களுடன் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட பெறுமதி கூடிய போலி நாணயத்தாள்களை பரிமாறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் பண்டிகைக்காலத்தை பயன்படுத்தியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போலி நாணயத்தாள்களை பரிமாறுவதற்கு சிலர் முயற்சித்தால் அது தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.