crossorigin="anonymous">
வெளிநாடு

யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறப்பு

இந்தியா – ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு நடந்ததை மூவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் மறுப்பதாகக் கூறுகிறது காவல்துறை. என்ன நடந்தது?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு வயது 32. இவருக்கு கோமதி (வயது 28) என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், கருவுற்றிருந்த கோமதிக்கு கடந்த 13-ம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்பிருப்பதாக, மருத்துவர்கள் நாள் கொடுத்திருந்தனர்.

குறிப்பிட்ட நாளில் கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. பின்னர், 18-ம் தேதி மாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூட்யூபை பார்த்து பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக, புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் மணிமாறன் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

“கடந்த 18-ம் தேதி மாலை நான்கு மணியளவில் அவர்களுக்கு பிறந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. மேலும், தாய்க்கு ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக புன்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கிருந்த மருத்துவர் மோகன் அப்பெண்ணுக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்து வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு‌ அனுப்பி வைத்தார். பின்னர் லோகநாதன் வீட்டுக்கு அருகே விசாரணை செய்ததில் யூ-டியூப் பார்த்து சிகிச்சையளித்து தெரிந்தது,” என்றார்‌ ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் மணிமாறன்.

யூ-டியூபை பார்த்து பிரசவம் பார்த்தோம் என லோகநாதன், அவரது மனைவி கோமதி மற்றும் சகோதரி கீதா மூவரும் எங்களிடம் எழுதிக் கொடுத்துள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிமாறன்‌ கூறுகிறார். இதையடுத்து, அவர்கள் எங்கு சிகிச்சை எடுக்கிறார்கள், என்ன சிகிச்சை மேற்கொள்கிறார், என்பதை அறிய தொடர்ந்து முயன்றும் மருத்துவக் குறிப்புகளை காண்பிக்கவில்லை என்றார் மணிமாறன்.(பிபிசி)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 5 = 7

Back to top button
error: