இந்தியா – டெல்லியில் இன்று (27) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 17 மாநிலங்களில், 422 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேரும், அதைத்தொடர்ந்து டெல்லியில் 79 பேரும் ஒமைக்ரானால் பாதி்க்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 41 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 43 பேரும், கேரளாவில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநில அரசும் வரும் 28ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
புத்தாண்டு வருவதால் அது தொடர்பாக கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.
தலைநகர் டெல்லியில் 290 புதிய கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை நேற்றிலிருந்து 16 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியின் தினசரி தொற்று எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் அதிகரித்துள்ளது. கேஸ் பாசிட்டிவிட்டி விகிதம் 0.5 சத வீதமாக உயர்ந்துள்ளது.
டெல்லி அரசின் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் திட்டத்தின் (GRAP) கீழ், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நேர்மறை விகிதம் 0.5 சதவீதமாக இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை தொடங்கும். இது கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும். கோவிட் இன் மூன்றாவது அலையை எதிர்பார்த்து ஜூலை மாதம் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.(இந்து)