மூதூர் பிரதேச கலாசார இலக்கிய விழா
மூதூர் பிரதேச கலாசார இலக்கிய விழா இன்று (29) மூதூர் மத்திய கல்லூரியில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பிரதேச ரீதியாக நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
கலை இலக்கிய நிகழ்வுகள் கடந்த கொவிட் காலங்களில் உரிய காலப்பகுதிகளில் நடாத்த முடியாமல் போனது. இவ்வாறான கலை இலக்கிய நிகழ்வுகள் மூலம் கலை இலக்கிய திறமைகளை வெளிக் கொணர கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படும் என்று இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்டு வரும் முத்து இலக்கிய சஞ்சிகையும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இதழின் முதல் பிரதி பிரதேச செயலாளரினால் மேலதிக அரசாங்க அதிபரிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர், திணைக்கள தலைவர்கள் , கலைஞர்கள், நலன் விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் பிரதேச கலாசார சபை ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.