crossorigin="anonymous">
வெளிநாடு

விமானத்தில் நடுவானில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று

விமான கழிவறையில் 5 மணி நேரம் தனிமைப்படுத்தல்

அமெரிக்க பள்ளி ஆசிரியை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது நடுவானில் தெரிய வர, சுயமாக முன் வந்து தன்னைத் தானே ஐந்து மணி நேரம் கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மரிசா ஃபொடெயோ கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து, ஐஸ்லாந்தின் ரெய்க்ஜவீக் நகரத்துக்கு விமானத்தில் பயணித்த போது அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டதை உணர்ந்தார்.

விமானத்துக்குள் தன்னோடு கையில் கொண்டு வந்திருந்த கொரோனா விரைவு சோதனை கிட்டைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு தன்னை கழிவறையில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், முழு பயண நேரத்தையும் கழிவறையிலேயே கழித்தார். ஒரு விமானப் பணியாளர் மட்டும் அவருக்குத் தேவையான உணவு, குடிநீர், பானங்கள் போன்றவற்றை வழங்கினர்.

“அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என மிஷிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியை மரிசா ஃபொடெயோ என்பிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார். “என்னோடு விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர், நான் அவர்களுக்கு கொரோனா வைரஸை பரப்பிவிடுவேனோ என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது” என கூறினார்.

ஐஸ்லாந்து ஏர் என்கிற விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் கழிவறையில் இருந்ததை, அவர் டிக்டாக் செயலியில் பதிவேற்றிய காணொளியை 40 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அந்த இக்கட்டான சூழலில் தனக்கு உதவிய விமானப் பணியாளரை மரிசா ஃபொடெயோ வெகுவாகப் பாராட்டினார்.

ஐஸ்லாந்தில் தரை இறங்கிய பின், ரெட் கிராஸ் விடுதியில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்ததாக கூறினார் மரிசா ஃபொடெயோ.

உலகம் முழுக்க ஒமிக்ரான் திரிபு பரவிக் கொண்டிருக்கும், குரிப்பாக அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாக ஒமிக்ரான் திரிபு இருக்கும் போது, மரிசா ஃபொடெயோ இப்படி ஒரு சவாலான சூழலை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஆறாவது நாளாக, வியாழக்கிழமையும் சுமார் 1,100 விமானங்கள் அமெரிக்கா முழுவதும் ரத்து செய்யப்பட்டதாக ‘ஃப்ளைட் அவேர்’ என்கிற நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.(பிபிசி)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 8

Back to top button
error: