‘பசுமை மனிதர்’ – சிங் புரோஹித் சைக்கிளில் 25,000 கி.மீ. பயணம்
மாத வருவாயில் 70 சதவீதம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக
இந்தியா – ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி நர்பாத் சிங் புரோஹித் சைக்கிளில் 25,000 கி.மீ. தொலைவு பயணம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நர்பாத் சிங் புரோஹித் (34), இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். தனது சொந்த செலவில் 21 குளங்களை வெட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில மக்கள், அவரை ‘பசுமை மனிதர்’ என்று அழைக்கின்றனர்.
சுற்றுச் சூழலை பாதுகாப்பது தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட நர்பாத் சிங் புரோஹித், கடந்த 2019 ஜனவரியில் காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இதுவரை 23 மாநிலங்களில் 25,000 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது தெலங்கானாவில் முகாமிட்டுள்ள அவர் இன்னும் 5,000 கி.மீ. தொலைவு சைக்கிளில் பயணம் செய்து தனது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் 10% மாற்றுத் திறனாளி. எனது காலில் 38 தையல்கள் போடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து மரக் கன்றுகளை நட்டு வருகிறேன். வரும் வழியெல்லாம் கிராமங்கள், நகரங்களுக்கு சென்று சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
எதிர்கால சந்ததியினர் வளமாக வாழ வேண்டும்.இதற்கு ஒவ்வொரு நபரும் தன்னுடைய வாழ்நாளில் 2 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். என்னுடைய மாத வருவாயில் 70 சதவீதத்தை சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக செலவிடுகிறேன். சுற்றுச் சூழலை பாதுகாத்தால் மட்டுமே இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியும்” என்றார்.(இந்து)