பிரான்ஸில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
வைரஸ் தனது உடலமைப்பில் 46 வகையான உருமாற்றங்களைக் கொண்டிருக்கிறது
உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸுக்கும், அதன் உருமாற்றமான ஒமைக்ரானுக்கும் அஞ்சி வரும் நிலையில், பிரான்ஸில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஐஹெச்யு- பி.1.640.2 என்ற பெயர் கொண்ட இந்தப் புதிய கரோனா வைரஸால் இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கும், ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள வைரஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என பிரான்ஸ் விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.
இந்தப் புதிய வைரஸ் எவ்வாறு மனிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்கும், பாதிப்பு எப்படி இருக்கும், பரவுதல், குணங்கள் ஆகியவற்றை உடனடியாகக் கணிக்க முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஐஹெச்யு வைரஸ் தனது உடலமைப்பில் 46 வகையான உருமாற்றங்களைக் கொண்டிருக்கிறது. 30 அமினோ ஆசிட்களைக் கொண்டுள்ளதாக என்501ஒய் மற்றும் இ484கே உள்ளிட்ட 14 வகை அமினோ ஆசிட்கள் அதன் ஸ்பைக் புரதத்தில் காணப்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த வைரஸ் இதுவரை வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. உலக சுகாதார அமைப்பும் இது தொடர்பாக விசாரித்து வருகிறது.
மெட்ஆர்எக்ஸிவ் என்ற மருத்துவ இணையதளத்தின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, “இந்தப் புதிய வைரஸ் கடந்த நவம்பர் மாதமே ஒரு இளைஞர் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் புதிய வைரஸ் உருவாகிக்கொண்டேதான் இருக்கும்.அதற்காக அனைத்து வைரஸ்களும் ஆபத்தானவை என்ற அர்த்தமில்லை. உண்மையான கரோனா வைரஸைவிட உருமாறி இருப்பதால், இந்த வகை வைரஸ்கள் பன்மடங்கு தன்னைப் பிரதியெடுக்கும் வேகம்தான் ஆபத்தானது.
அதாவது ஒமைக்ரான் வைரஸைப் போல் ஆபத்தானது. ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடக்கூடியது. இதில் எந்தப் பிரிவில் புதிய வகை வைரஸ் வரப்போகிறது எனப் பார்க்கலாம்” எனத் தெரிவிக்கின்றனர்.(இந்து)