தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வீட்டுக்கு வெளியே வந்தால் கைது
பிலிப்பைன்ஸ்சில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் பிலிப்பைன்ஸ் அரசு இறங்கியுள்ளது. அந்தவகையில் பிலிப்பைன்ஸில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.3 கோடி மக்களை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தலைநகர் மணிலாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் பேசுகையில், “ பிலிப்பைன்ஸில் ஒமைக்ரான் தீவிரமாகப் பரவுகிறது. இதனால் அவசர நிலை நிலவுகிறது. முதல் டோஸ் தடுப்பூசிகூட போடாத மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விதிமுறையை மீறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் அனைவரும் ஆபத்தில் சிக்குவார்கள்” என்று தெரிவித்தார்.(இந்து)