ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 10 அமைச்சுக்களின் நிறுவகங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை மாற்றியமைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளார்.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2187/27 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிதலுக்கு அமைவாக, பொருளாதார கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் கீழ் இயங்கி வந்த மத்திய கலாசார நிதியம், புத்த சாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார அறக்ககட்டளை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு நீக்கப்பட்டு, அதன்கீழ் காணப்பட்ட அனைத்து நிறுவகங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலை நோக்கு கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கி வந்த, தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு (1991 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க சட்டம்) கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் விசேட முன்னுரிமையின் அடிப்படையில் இலங்கை முதலீட்டு சபை பணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. 1980 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (ஒருங்கிணைத்தல்) சட்டம் கைத்தொழில் அமைச்சின் நிறுவக மற்றும் சட்ட கட்டமைப்பின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கி வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டம் என்பன, அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.