crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட விருப்பம்’ – இலங்கை ஜனாதிபதி

ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அவர்கள், அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, லோர்ட் தாரிக் அஹமட் அவர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்

தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், லோர்ட் அவர்கள் உறுதியளித்தார்.

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton), முதன்மைச் செயலாளர் மேத்யூ டெய்த் (Mathew Deith), லோர்ட் தாரிக் அஹமட் அவர்களின் உதவியாளர் இசபெல் ஸ்கொட் (Isabelle Scott), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − = 25

Back to top button
error: