crossorigin="anonymous">
வெளிநாடு

புதிய தலைநகருக்கு ‘நுசாந்தரா’ என பெயர் மாற்றம்

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்ற நாடாளுமன்றம் ஒப்புதல்

இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு இந்தோனேசிய நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனப் பெயர் வைக்கவும் இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்தோனேசியத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்த கோரிக்கை தற்போது நிறைவேறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் தலைநகரை மாற்ற நாடாளுமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய தலைநகரை மேம்படுத்துவதற்கான பணியை இந்தோனேசியா தொடர்ந்துள்ளது.

தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த நிலப்பரப்பு சுமார் 256,143 ஹெக்டேர் (சுமார் 2,561 சதுர கிலோ மீட்டர்) என அளவிடப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவின் பெரும்பகுதியை இந்தோனேசியா கொண்டுள்ளது. மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் போர்னே தீவின் வடக்குப் பகுதியின் சில பகுதிகளைக் கொண்டுள்ளன.

ஏன் தலைநகரை மாற்றுகிறது இந்தோனேசியா? தலைநகர் ஜகர்த்தாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தோனேசிய அரசுக்குத் தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வந்தது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறு இயற்கை பேரிடர்களால் கடும் பாதிப்பை ஜகர்த்தா சந்தித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வாகனப் பெருக்கமும், காற்று மாசும் ஜகர்த்தாவில் அதிகரித்து வருகின்றன.

2019ஆம் ஆண்டே ஜகர்த்தாவிலிருந்து தலைநகரை மாற்றும் முடிவை இந்தோனேசிய அரசு எடுத்துவிட்டது. கரோனா காரணமாக இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 2 =

Back to top button
error: